Friday, March 30, 2018

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் அதிருஷ்டானம் - நெரூர்



 ஒரு  ஞானியின் வாழ்ந்த இடத்தை விடவும் அவர் ஆதியோடு அந்தமாய் தன்னை இணைத்துக்கொண்ட உயிரை உடலுக்குள் சுவர விட்டு  சம ஆதியான இடத்தில் பஞ்சபூத அணுக்களுக்குள் சூட்சுமமாய் அவர் எண்ணங்களை தாங்கி நிற்கிறது .

அது இன்னொரு ஆன்மாவை தூண்டியெழுப்பும் ஆற்றலை சதா வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது .அப்படி ஒரு ஆற்றல் களமான  கரூர்  புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருமுக்கூடல் செல்லும் 4 ம் நம்பர் பேருந்தில்  10 கிமீ சுமார் தொலைவிலிலுள்ள நெரூர் - ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் அதிருஷ்டானத்தை தரிசித்த அனுபவமே இங்கு மலர்கிறது .

திருமூலருக்கு பின் சித்த யோக மார்க்கத்தின் யோக நிஷ்டையின் உயர்ந்த நிலைகளின் சிகரங்களை எல்லாம் சுயஅனுபவ ரீதியாக துல்லியமாக ஆராய்ந்து அறிந்தவர் எனும் பெருமையை பெற்ற சிலரில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராளூம் ஒருவர். பிரம்மேந்திராள் கையாண்ட ஸ்தூல உடலை நெரூரிலும் , சூட்சும உடலை  பாகிஸ்தான் கராச்சியிலும், காரணச் சரீரத்தை மானாமதுரையில் உள்ள ஆனந்த வல்லியம்மன் கோவில் உட்பட மூன்று இடங்களில் சமாதியடைந்துள்ளகள் இதுவரை யோக சாதனையில் எவருமே துணிந்து செய்திராத முறைகளாகும்.

கவனமில்லாது  சதாசிவர் அதிருஷ்டானம் என் நினைத்து ஒரே சுற்று சுவரால் சூழப்பட்ட ஸ்ரீ கைலாச ஆஸ்ரமத்திற்குள் பிரவேசித்து விட்டோம்.அங்குள்ள ஸ்ரீலஸ்ரீ சதாசிவானந்த சுவாமிகள் சமாதி பராமரிக்கப்பட்டு வருகிறது.

அங்கு தரிசனம் நிகழ்த்தி விட்டு,புறப்படும்போது எப்போதும் எங்கு சென்றாலும்  என் பழக்கத்தில் ஒன்று ஸ்தல வரலாறு வாங்குவது.அப்படி ”ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சரித்திரச் சுருக்கம்” என்ற பெயரில் இருந்தது. வாங்கிக்கொண்டோ.பிறகு அதே வளாகத்திலுள்ள ஸ்ரீ சதாசிவரின் அதிருஷ்டானத்தின் பின் வழியாக பிரவேசித்தோம்.


வழக்கமாக சதாசிவரின் அத்ருஷ்டானத்தில் வியாழக்கிழமையும், சித்ரா பெளர்ணமி, மற்றும் வைகாசி மாதம் சுத்த பஞ்சமி தொடங்கி தசமி வரை சிறப்பாக விசேஷங்கள் ஆராதனை நடைபெறும்.  ஜீவசமாதிகளுக்கு சென்றி தியானிக்க விரும்புவர்கள் மிகச் சாதரண நாட்களில் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர் சுகுமாருடன்  அந்த ஞாயிறை தேர்வு செய்து சென்றோம்.ஆனால் தியானிக்க வந்தவர்களைக் காட்டிலும் அங்கு சதாசிவருக்கு அர்ச்சனை செய்ய வந்தவர்களே அதிகமிருந்தனர்.


எனது சொந்த அபிப்ராயப்படி ஜீவ சமாதியென்பதை சூட்சுமம் நிறைந்த சமுத்திரமாகவே உணர்கிறேன் .அவைகள் வழக்கமான பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்குச் செய்ய வெண்டிய  கோவில்களின் ஆகமங்கள் மற்றும் மந்திர,யந்திர,தந்திர விதிகளுக்கு கடந்து நிற்பவை .அதன் தன்மை வேறு ஆனால் நாம் எல்லாவற்றையும் கோவிலாகவே மாற்ற முயற்சிக்கிறோம்.

ஞான யோகத்தின் சாட்சியான ஜீவ சமாதிகளின் அடையாளங்களை தொலைக்கிறோமோ என்ற கேள்விகள் அச்சத்தை தருவிக்கின்றன.ஜீவ சமாதி அடைபவர்கள் உலக நன்மைக்காக வேண்டியே அதை செய்வார்கள். அப்படி செய்யும்போது அந்த எண்ணங்கள் அவர்கள் உடலோடு ஒன்றி இருக்கும். அந்த எண்ணங்களின் அதிர்வுகள் அந்த ஜீவ சமாதியின் மீதிருந்து எதிரொலித்து கொண்டே இருக்கும். நாம் அவற்றை வலம் வரும் போது, அந்த அதிர்வுகளானது நம் மனதால் உட்கிரகிக்க, அதை தூய்மை செய்து, நல்ல சிந்தனைகளை நம் மனதிற்குள் விதைத்து விடும். பல மகான்கள் ஜீவ சமாதியை தேர்ந்தெடுக்க இதுவே முக்கிய காரணம்.

இரண்டு முறை தியானத்தில் அமர்ந்தோம்.

சகஸ்ரார யோக தவமான துரியத்தில் அற்புதமான விழிப்பு நிலை கிடைத்தது.

பொதுவான தியான வழக்கப்படி வெறும் தரையில் அமர்ந்து தியானம் செய்வது உகந்தது அல்ல .அங்கு சில தியான விரிப்புகள் இருந்தது.ஆனால் அவை அளவில் மிகச் சிறியது.ஒருவேளை அங்கு தியானம் செய்ய முக்கியத்துவம் இல்லை என்பதை நேரடியாக அதன் மூலம் சொல்லுகிறார்களோ என்னவோ ?


சரி இனி இந்தப்பதிவின் உள்நோக்கத்திற்குள் பிரவேசிப்போம்…

அதிருஷ்டானத்தைச் சுற்றி விட்டு ( இப்போதுதான் சரியான ) முன் வாசலுக்கு வந்தோம்.அங்குள்ள அலுவலக அறை முன் உள்ள நூல் விற்பனை டேபிளில், ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சேவா ட்ரஸ்ட் வெளியீட்டின் மூலம் – ”ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சரிதம்”நூல் விற்பனைக்கு இருந்தது.
நாங்கள் ஏற்கனவே ஸ்ரீகைலாச ஆஸ்ரமத்தில் வாங்கிய நூலைக் காண்பித்து இதுவும் அதுவும் ஒன்றா என்று அங்கிருந்த விற்பனை செய்பவரைக் கேட்டோம்.அதற்கு இங்கு விற்பனை செய்யும் சரிதமே சரியானது அங்கு (ஸ்ரீகைலாச ஆஸ்ரமத்தில்)விற்பனை செய்வது இதை காப்பி அடித்து என்றார்.

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் என்ற ஞானிக்கு ஒரே வளாகத்திற்குள் இரண்டு வெவ்வேறு சரிதம் உருவாக்கப்பட்டு இருக்கிறதா ?
ஒரு பாடத்திற்கு இரண்டு விதமான டெக்ஸ்ட் புத்தகம் எப்படி இருக்க முடியும் ?  என்ற கேள்வி எழுந்தது.

அதையும் வாங்கிக்கொண்டோம்.



இல்லத்திற்கு திரும்பியவுடன் இரண்டு சரிதமும் படித்தேன் .
காப்பி அடிக்கப்பட்டதாக சொன்ன ஸ்ரீகைலாச ஆஸ்ரம ”ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சரித்திரச் சுருக்கம்” விரிவாக இருந்தது.

 பல முக்கிய இடங்கள் இரண்டும் சரிதமும்  வித்தியாசப்பட்டன.

அதில்முக்கியமாக ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள்  ஜேஸ்ட சுத்த தசமியில் தனது சமாதி நாளை தேர்வு செய்து அதை  தஞ்சை, மைசூர்,புதுக்கோட்டை மன்னர்கள் மூவரிடமும் தனது மனதின் வலிமையால் அவர்களுக்கு உணர்த்தினார் என்கிறது  ஸ்ரீகைலாச ஆஸ்ரம சுருக்கச் சரிதம் (பக்கம் 37 ) அதே நிகழ்வை (தன்னை அசல் என்று சொல்லிக்கொள்ளும்) ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சேவா ட்ரஸ்ட் சரிதம் அப்போது அவர் (ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள்) சில பிராமணர்களை அழைத்து ( பக்கம் 24 ) சொல்லப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்னதான் யூகவரலாறானாலும் எப்படி  மூன்று அரசர்கள் அழைக்கப்பட்ட ஒரு நிகழ்வு இங்கு நீக்கப்படுகிறது ஏன் என்ற தேடலுடன் இணையத்தில் தேடத்தொடங்கினேன் …

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் விக்கிப்பீடியாவில் ”தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சதாசிவ பிரமேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, தோழன் எனும் புதினத்தை எழுதியுள்ளார் என்று அறிந்து ,கோவை விஜயா பதிப்பகத்தார் மூலம் வாங்கி வாசித்தேன் (சுமார் 165  பக்கம் ) அதில் திரு.பாலகுமாரன் தஞ்சை, மற்றும் புதுக்கோட்டை  இரண்டு மன்னர்களை மட்டும் மனதால் வரவைத்தார் என்று ( 170 பக்கம் ) சொல்லப்பட்டு இருந்தது.

அப்படியானால் யாருக்காக இது மாற்றப்பட்டது ?
இன்னும் கூட பல கேள்விகள் எழுகிறது.

1. ஜகத்குரு ஸ்ரீ பரமசிவேந்திராள் அவர்களால் சீடனாக எற்றுக்கொள்ளப்பட்ட சிவராம கிருஷ்ணன் ,ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் என்று முழுமை நோக்கி நகர்ந்து இருக்கிறார்

2. தஞ்சை , மைசூர் ,புதுக்கோட்டை மன்னர்களோடு தொடர்பிலிருந்து இருக்கிறார்.

3. மானஸ ஸஞ்சரரே, சர்வம் ப்ரம்ம மயம், பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், பிரம்ம சூத்ர வ்ருத்தி, ப்ரம்ம தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்ய விலாஸம் போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.

இத்தனையிருந்தும் இவர் வரலாறு நம்மிடம் முழுமையாக்கப்படவில்லை .
இதற்கு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சேவா ட்ரஸ்ட் ஏன் முயற்சி செய்யவில்லை ?

யார் மீதும் குறை சொல்ல வேண்டும் என்பது இந்தப் பதிவில் என் உள்நோக்கம் அல்ல.நாம் அந்த மாபெரும் ஞானியின் பெருமைகளை ஏன் அகன்ற மனதோடு ஆழமாக பதிவு செய்யக்கூடாது என்ற ஆதங்கமே அல்லது கோரிக்கையே என் பதிவின் நோக்கம் .

1 comment:

  1. ஞானிகளைப்பற்றி முழுமை, அப்படியே அறியத்தருவதில்தான் வரலாறு எழுதுபவர்களின் முழு அறிவும் புலப்படும், அந்த ஞானிகளின் ஆசிர்வாதமும் கிட்டும். சிலவற்றின் உண்மை இனி வரும்காலங்களிலாவது வெளிவரவேண்டும்.

    ReplyDelete