Tuesday, May 31, 2016

குருவை இன்னும் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்..


பிரிவு உபச்சார விழா !

                                சென்ற ஞாயிறு ( மே 29 ) சாமுண்டிபுரம் அறிவுத் திருக்கோவில் விசன் மாணவர்கள் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. 

             தமிழில்தான் இப்படிப்பட்ட பெயர் இருக்கும் பிரிவு உபச்சார விழா .பிரிவைக்கூட உபச்சாரம் செய்து அனுப்புபவன் தமிழன் மட்டுமாகத்தான் இருக்கும் .46 மாணவர்களுடன் தொடங்கிய இந்த ஒரு வருட பயணத்தில் திட்டஅலுவலர் ( Program Officer ) என்ற பொறுப்பில் குருவருளின் துணையோடு இருந்திருக்கிறேன் .வித்தியாசமான பல அனுபவங்கள் இந்தக் காலக் கட்டத்தில் நடைபெற்றது .இங்கு என்ன செய்தேன் என்பதைவிடவும் என்ன செய்யவேண்டும் என்பதைத்தான் அதிகம் தெரிந்து கொண்டேன் .மிகப்பொறுப்புள்ள அலுவல்.இதில் எனக்கு நான் போட்டுக்கொண்ட மதிப்பெண் நூற்றுக்குப் பத்துதான்.எந்த ஒரு வேலையையும் நமக்குச் செய்து கொள்ளும் போது உணர்வுடன் கற்றுக்கொள்ளவேண்டும் அதையே மற்றவர்களுக்குச் செய்யும் போது உணர்வுடனும் நிர்வாகத்திறனுடனும் செய்யத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நெற்றிப் பொட்டில் அடித்தது போலச் சொல்லிக்கொடுத்திருக்கிறது. 


யோகமும் மனித மாண்பும்.

                              இந்தப் பிரிவு உபச்சார விழா தாங்கள் யோகமும் மனித மாண்பும் விசன் ஃபார் விஷ்டம் (vision for wisdom - yoga for human excellence ) பயிற்சிக்கு வரும் முன் உடல், மன,சமூகத்தொடர்பில் எப்படி இருந்தார்கள் என்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் அதன் மூலம் இன்னும் குருவின் சேவையில் தன்னைத் தொடர்ந்து இணைத்துக்கொண்டு மேலும் கல்வி மற்றும் சேவையில் தொடர ஒரு வாசல் போன்றது இந்த விழா . அவர்கள் படிக்கும் போது பல நிகழ்ச்சிகள் வாயிலாகச் சொல்லையிருந்தாலும் ஒரு பலன் பெற்ற சந்தோச அனுபவத்தின் போது பேச இன்னும் பயனுள்ளதாக இருக்கும் . ஏனென்றால் வேதாத்ரியம் என்பது முழுக்க முழுக்க நடைமுறை சார்ந்த (Practical Oriented) கல்வியும் அதன் மூலம் பயன் பெறும் உள்ளுணர்வு அனுபவம் .இதை வேறு ஒருவர் அனுபவத்திலிருந்து பெற முடியாது . நாமே முயன்றால் மட்டுமே அதை அனுபவிக்க முடியும் .வாரம் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) மூன்று நாள் வகுப்புக்கு காலை 5.30 க்கு (அல்லது பகல் பத்து மணிக்கு ) வர வேண்டும் 45 நிமிடம் உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் அடுத்த 30 நிமிடம் தியானம் கடைசி 45 நிமிடம் பேராசிரியர்களால் வழங்கப்படும் சிந்தனையுரை .இதில் தொடர்ந்து வருபவர்கள் மிகப்பெரிய மாற்றங்களை உணர்ந்து இருக்கிறார்கள்.நீண்ட நாள் சில நோய்களின் தீவிரத்திலிருந்தும்,வயது மற்றும் தொழில் சார்ந்த உழைப்பால் பெற்ற உடல் உபாதைகளிலிருந்தும் மிகப்பெரிய விடுதலையைப் பெற்று இருக்கிறார்கள். 




 கல்வியின் பயன் .

                        வாழ்வதற்கு மிக முக்கியம் உடல் ஆரோக்கியம் அதை யந்திரம் என்று சொல்லாம் அதற்கு அடுத்து ஆரோக்கியமான இந்த உடலைக் கெடுத்துக்கொள்ளாத வாழ்வியல் செயல்பாடுகளுக்கான மன ஆரோக்கியம்.அது இங்குக் கற்பிக்கப்படும் தியானத்தை மந்திரம் என்று சொல்லலாம் மற்றும் அகத்தாய்வு என்ற சுய முயற்சியால் பெறப்படுகிறது .அடுத்து உடலுக்கும் உயிருக்குமான இணைப்பைத்தரும் உயிர் ஆரோக்கியத்திற்கான மாபெரும் சித்தர்களின் ரகசியத் தந்திரங்களில் ஒன்றாக வடிவமைக்கப்பட்ட தினமும் சில நிமிடங்களே செய்யக்கூடிய ’காயகல்ப’ பயிற்சி சொல்லி வைக்கப்படுகிறது இது உங்களில் எப்படிச் செயல் படுகிறது என்ற சூத்திரங்களைத் தன்னுடையை ஐம்பது வருட கால வாழ்வை, உடலை அர்பணித்து ,உலகில் சொல்லப்படும் அனைத்து யோக நூல்களின் துணையோடு தன்னுடைய சித்தவைத்திய மருத்துவப்பட்ட அறிவை உபயோகித்து யோகிராஜ் வேதாத்ரி மகரிசி அவர்களால் உருவாக்கப்பட்ட பயிற்சி பாடமாக்கப்பட்டதுதான் மனவளக்கலைப் பாடதிட்டங்கள் அனைத்தும் .இதில் பயன் பெற்ற பலரின் அனுபவங்கள் ஆச்சர்யம் தரும் . இங்குப் பயிற்சிக்குச் சேரும்போதே அவரவர்களுக்கு ஒரு படிவம் கொடுப்படும் அதில் அவரவர்களுக்கான அரோக்கியம் மற்றும் பிரச்சனைகள் பற்றி எழுத்துவார்கள் .அது அவர்கள்மேல் கூடுதலான கவனம் செலுத்தப்பயன்படும் ஆனால் இங்குத் தங்கள் அனுபவ உரை பேசியவர்கள் பலர் சொல்லும் போதுதான் தெரிகிறது அவர்கள் சொல்லாத பல அற்புதப் பலன்களைப் பெற்று இருக்கிறார்கள் என்பதை. அப்போதுதான் அந்தத் திட்ட அலுவலரின் மேலதிகப் பொறுப்பு எவ்வளவு பெரியதாக இருந்து இருக்கிறது என்று மறுபரிசீலினைப் பண்ணிக்கொண்டேன் (அதனால்தான் வெறும் பத்து மதிப்பெண் கொடுத்துக்கொண்டேன் ) 


குருவை இன்னும்.. 

                          இந்த விழா எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் இந்தப் பரந்து விரிந்துபட்ட உலகில் என்ன தேவைக்காக இந்த உடல் படைக்கப்பட்டு இருக்கிறது வாழ்வின் நோக்கம் எது என்பதையும் , எவ்வளவு வகையில் சத்தமில்லாமல் செய்ய சேவைகள் இருக்கிறது என்பதையும் அதற்கு இந்த விழா தந்த அனுபவம் பிறவிப்பயனில் ஒன்று .எனவே குருவை இன்னும் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று மனம் சொல்ல, ஒவ்வொருவராய் எல்லோரும் விடைபெற்ற பின் யோசித்து கொண்டே வீடு வந்து சேர்ந்தேன் .

1 comment:

  1. இணையத்தில் இது போன்று பகிர்வுகள் பதிவு செய்யப்படவேண்டும்.,
    நீங்கள் திருப்பூர் சாமுண்டிபுரம் மன்றம் என்பது கூடுதல் மகிழ்ச்சி

    ReplyDelete