Saturday, June 11, 2016

வேதாத்ரி மஹரிசி முடித்து வைத்த கதை !

                    
       
 குரு மஹான் வேதாத்ரி மகரிசி அவர்களுக்கு அன்னை லோகாம்பாள் காவேரி என்ற ஒரு மாத இதழில் வந்து இருந்த ஒரு கதையைப் படிக்கக் கொடுத்தார்.அந்தக் கதையில், ஒரு அன்பான தம்பதியினர் பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள் . இதனால் அந்தப்பெண்ணை உற்றாரும் மற்றவரும் மலடி என மனம் நோகும்படி பழித்துக் கூறுவதைப் பொறுத்துக்கொள்ள இயலாத அந்தப்பெண் தனது கணவனை இரண்டாம் தாரமாகச் செய்ய வற்புறுத்துகிறாள் .ஆனால் அவள் கணவனோ தன் மனைவி மீதுள்ள அன்பினால் மறுமணத்திற்கு மறுத்து விட்டுத் தனது மனைவியைச் சமாதானப்படுத்தி விட்டு வெளியே போகிறான். வெளியே போனவன் இரவு திரும்பி வீடு வந்து பார்க்கும் போது மனைவியைக் காணவில்லை இரவு முழுதும் தேடுகிறான்.மறுநாள் காலை அவள் பிணம் காவேரி ஆற்றோரத்தில் ஒதுங்கியிருந்தது...என்று கதை முடிகிறது
               
           அந்தக் கதைப்படி உற்றார் உறவினர் பழிச்சொற்கள் ஒருபுறம் அவளைப் புண்படுத்தின.அந்த நிலைமை உணர்ந்து இரண்டாம் செய்துகொண்டு தன்னைப் பழிச்சொல்லிருந்து விடுவிக்க மறுக்கும் கணவனின் பிடிவாதம் ஒருபுறம் அவளைத் துன்புறுத்தின .அவள் அந்நிலையில் தொடர்ந்து உயிர் வாழ விரும்பவில்லை என்ற ஒரு பெண்ணின் மனதைப் படம் பிடித்துக் காட்ட அந்த எழுத்தாளன் அந்தக் கதையை எழுதியிருக்கிறார்.  மஹரிசியை அன்னை லோகாம்பாள் வாசித்துப் பார்க்கச் சொன்ன தருணம் மிக முக்கியமானது .அந்தக் கதையில் வரும் பெண்ணைப் போலவே அன்னை லோகாம்பாளும் தனக்கு திருமணமாகி ஒன்பதாண்டாகியும் குழந்தை இல்லையென்று வருந்தி அளவில்லா மனத்துயர் அடைந்து மஹரிசியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நாளுக்கு நாள் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்த நேரம் அது.

              ஆனால் அந்தக்  கதையை முடித்தவிதம் பற்றிக் கருத்தும் கூறும் மகரிசி அந்தக் கதாசிரியர் அந்தக்கதையை முழுமையாக முடிக்கவில்லை .இன்னும் தனது சிந்தனையை விரித்துக் கதையை முழுமையாக முடித்து இருக்க வேண்டும் என்று ஒரு கதாசிரியனின் பொறுப்பைச் சொல்வதோடு அந்தக் கதையை முழுமைப்படுத்தி அவரே முடித்தும் வைக்கிறார் பாருங்கள் ... 

”தனது அன்பு மனைவியை இழந்த கணவன் தனது பிரிவாற்றாமைத் தாங்க முடியாமல் வீட்டைவிட்டு வெளியேறிவன் பின்னர்த் திரும்பவேயில்லை.சில மாதங்கள் கழித்து அவனை ரிசிகேசத்தில் ஒரு சந்நியாசி வேடத்தில் பார்த்தாக யாரோ கூறினார்கள்:” 

                                                                                      என்பதாக அந்தக்கதையின் முடிவைச் சற்று நீட்டிமுடித்து இருக்க வேண்டும் என்கிறார் மகரிசி.அவ்வாறு அந்தக்கதை முழுமை பெறாத அக்காரணத்தால் தன் வாழ்வின் குறுக்கீடாக ஒரு பாறாங்கள் போல் நின்றது எனச் சொல்கிறார் .
                   
               
             ஒருவேளை இந்த கோணத்தில் அந்தக்கதை முடிவு இருந்திருந்தால் அன்னை தன் கருத்தை மாற்றி புரிந்து கொள்ள வாய்ப்பிருந்து தன்னை மறுமணம் செய்ய வற்புறுத்தி இருக்கமாட்டார் என மகரிசி நம்பினார்.ஆனாலும் பல ஆண்டுகள் கழித்து ஒரு சமயத்தில் யாரோ ஒருவர் மகரிசியை உங்களுக்கு குழந்தை இருக்கிறதா ? என்று கேட்டபோது இல்லை என்று சொல்ல வந்த மஹரிசியை தடுத்த அன்னை, ஏங்க அப்படி சொல்றீங்க நமக்குத்தான் எத்தனை ஆயிரம் குழந்தைகள் இருக்கிறது ? என்று  அளவுக்கு பக்குவமும் பெற்றவர் ஆனார் என்பதை நாம் அறிகிறோம் .அதனால்தான் நம் குருவின் அறிவுறுத்தல்படி அன்னை லோகாம்பாள் பிறந்த நாள் ஆகஸ்ட் 30  மனைவி நல வேட்பு விழாவாக கொண்டாப்படுகிறது .

No comments:

Post a Comment